மதுரை:பாலியல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரிய, பள்ளி தலைமை ஆசிரியரின் மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல், 57. இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி, அவரது மனைவி டெய்சி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், சுந்தர்மோகன் விசாரித்தனர்.
அரசு கூடுதல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி, 'வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள, 30 சாட்சிகளில், 19 சாட்சியங்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது' என்றார்.
நீதிபதிகள், 'தலைமையாசிரியர் 2022 மே 7ல் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானார். வழக்கை பொறுத்தவரை, 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் தாய் புகார் அளித்த பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
'எனவே, குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.