கோவை:கோவை அந்துமணி நேசகர பேரவை, கே.ஆர்.புரம் மற்றும் கோவை அக்னி லயன்ஸ் கிளப்கள் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் வார்டுக்கு, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 2 ஸ்மார்ட் 'டிவி'கள் மற்றும் 'ஏசி' இயந்திரம் வழங்கப்பட்டது.
இதற்கான விழாவில், பேரவை ஒருங்கிணைப்பாளர் சுபா சுப்ரமணியன் வழங்க, மருத்துவமனை டீன் நிர்மலா பெற்றுக்கொண்டார்.
சுபா சுப்ரமணியம் பேசியதாவது:
கோவை அரசு மருத்துவமனைக்கு, 1994ம் ஆண்டே எங்கள் சங்கம் சார்பில், சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. தவிர, அதே ஆண்டில், 100 மரக்கன்றுகள் மருத்துவமனை வளாகத்தில் நடப்பட்டன. சமூக உணர்வை துாண்டும் அந்துமணியின் எழுத்துகள் பலராலும் பேசப்படுகிறது. அவரது துணிச்சலான, 'பார்த்தேன், கேட்டேன், படித்தேன்' தொடரை, ஒவ்வொரு வாரமும் 'தினமலர்' வாரமலரில் படிப்பது, பல புத்தகங்களை வாசிப்பதற்கு சமம்.
அந்துமணியை இதுவரை பார்த்ததில்லை என்றாலும், அவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, கோவையில் பேரவையை துவக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்களின் இந்த சேவை பணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள் பூபதி, மனோகர், ஸ்ரீதர், லயன்ஸ் முன்னாள் கவர்னர் நந்தபாலன், அரசு மருத்துவமனை முன்னாள் கதிரியக்க துறை தலைவர் வீரன் குட்டி, அரசு மருத்துவமனை ரேடியாலஜி துறை தலைவர் டாக்டர் பானுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.