மதுரை:அவனியாபுரத்தில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை, மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இரு தரப்பினர் இடையே கருத்து மோதல் உள்ளதால், இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் போட்டியை நடத்தியது.
தற்போதும், மாவட்ட நிர்வாகமே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு, ஏற்பாடு நடந்து வருகிறது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்யப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவுப்படி ஆலோசிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
மேலுார் ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் இருதரப்பினரிடம் பேச்சு நடத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்த ஒருங்கிணைப்பு கமிட்டியில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், 10வது உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
இருதரப்பிலிருந்தும் தலா எட்டு பேர் வீதம், 16 பேர் கொண்ட ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது.
இந்த குழு மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு தேவையான ஆலோசனைகளை மட்டுமே வழங்கும்.
இந்த குழுவினர் விளம்பரதாரரிடம், 'ஸ்பான்சர்' பெற முடியாது என, தெரிவிக்கப்பட்டது. சமாதான கூட்டம் நிறைவு பெற்றது.