திண்டிவனம்:திண்டிவனம் அருகே நம்பி சென்ற சிறுமியை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட மூன்று பேரை போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு, 19; ஆட்டோ டிரைவர். சந்தைமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர், இரண்டு மாதங்களாக திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால், சிறுமி சிம்புவிடம் நெருங்கிப் பழகினார்.
சிம்பு தன் காதலியுடன் பழகிய அந்தரங்க விஷயத்தை தன் நண்பர்களான திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சிவா, 21, சேட்டு மகன் செல்வம், 19, ஆகியோரிடம் பகிர்ந்துள்ளார்.
இதனால், சிவாவும், செல்வமும், தாங்களும் அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என, சிம்புவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு சிம்புவும் ஒப்புக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, சிறுமியை வழக்கம்போல் தனியாக சந்திக்கலாம் எனக்கூறி, தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரா கார்டன் பின்புறம் மறைவிட பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு, சிறுமியை மிரட்டி, சிம்பு, சிவா, செல்வம் ஆகிய மூவரும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நடந்த சம்பவம் குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று காலை சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
சிம்பு, சிவா, செல்வம் ஆகிய மூவர் மீதும் போக்சோ, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.