கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் மஞ்சள் கொத்து வரத்து அதிகரிப்பால், ஒரு கட்டு, 80 ரூபாய் முதல் விற்பனையானது.
தமிழகத்தில், நாளை பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில், மஞ்சள் கொத்துக்கு தனி இடம் உள்ளது. பொங்கல் பொங்கும்போது, கரும்புடன், இந்த மஞ்சள் கொத்தும் மங்களகரமாக வைக்கப்படும்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், நேற்று மட்டும் 180 லாரிகளில், மஞ்சள் கொத்து லோடுகள் வந்து இறங்கின. ஒரு கட்டு 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது; வரத்து அதிகரிப்பால் விலையும் குறைந்து உள்ளது.
இதுகுறித்து, சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், நாகர்கோவில், விழுப்புரம், சேலம், ஆத்துார், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மஞ்சள் கொத்து வரத்து உள்ளது. தமிழகத்தை தவிர்த்து, ஆந்திராவில் இருந்தும் மஞ்சள் கொத்துகள் வருகின்றன. வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. ஒரு கட்டு மஞ்சளில், 15 முதல் 20 வரையில் கொத்துகள் உள்ளன. சிறியது, பெரியது என கட்டுக்கு, 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.