தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கழனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ், 20, விக்னேஷ், 23, அருண்குமார், 29. உறவினர்களான மூவரும், நேற்று, 'ஹீரோ பைக்'கில் உறவினர் வீட்டில் பொங்கல் சீர்வரிசை கொடுக்கச் சென்றனர். அங்கு கறி விருந்து சாப்பிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர் திசையில், மற்றொரு ஹீரோ பைக்கில், பேராவூரணி அருகே மணக்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி, 26, என்பவரும், அவரிடம் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்யும், புதுக்கோட்டை, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சதீஷ், 25, செண்பக பாண்டியன், 26, ஆகிய மூவரும் வந்துள்ளனர்.
மதியம், 2:30 மணிக்கு ஊமத்தநாடு செல்லும் சாலை வளைவு அருகே, இரு பைக்குகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில், கழனிக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த நிலையில், பேராவூரணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், மணக்காட்டைச் சேர்ந்த கார்த்தியும் இறந்தார்.
படுகாயமடைந்த மற்ற மூவரும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பேராவூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த அருண்குமாருக்கு குழந்தை பிறந்து, 20 நாட்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.