தாம்பரம், சென்னை கோவிலம்பாக்கம், சுசிலா நகரைச் சேர்ந்தவர் ஷீபா, 37. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறியதாவது:
கடந்த 2021ம் ஆண்டு மரம் நடும் விழாவில், பரங்கிமலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆண்ட்ரூஸ் கார்டுவெல், 54, என்பவரை சந்தித்தேன்.
அப்போது, தாய் இறந்த மன அழுத்தத்தில் இருந்த என்னிடம், ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசி, தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறினார். பின், இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.
அதன் பிறகே, ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லுக்கு திருமணமானது தெரிந்தது. அதனால், அவரை விட்டு விலக முடிவு செய்தேன். இதையறிந்த அவர், 'மார்பிங்' செய்த என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டினார்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், ஆண்ட்ரூஸ் கார்டுவெல் தலைமறைவானார். பின், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு, ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை தேடினர்.
இந்நிலையில், கோல்கட்டாவில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.