கோவை:கோவை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் சந்தன மரங்களை குறி வைத்து வெட்டி கடத்திய கும்பலில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, ரேஸ் கோர்ஸில் கலெக்டர் பங்களா அமைந்துள்ளது. இங்கு, ஜன., 3ம் தேதி அதிகாலை நேரத்தில் புகுந்த கும்பல், சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது.
போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் கலெக்டர் பங்களாவில், சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம், அதிகாரிகள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், திருச்சி ரோடு நெடுஞ்சாலை குடியிருப்பில் இருந்த, 10 வயதான சந்தன மரம் ஒன்றும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதற்கடுத்த சில நாட்களில், சாய்பாபா காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சந்தன மரமும் வெட்டப்பட்டது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவுபடி துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் வெவ்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஐந்து பேரை கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் இருந்து, 30 கிலோ சந்தன மரக்கட்டைகள், அரிவாள்கள், 99 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், வடவள்ளியில் இவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்துள்ளது.
கலெக்டர் பங்களாவில் சந்தன மரம் வெட்டிய கும்பலும், தற்போது பிடிபட்டவர்களுக்கும் தொடர்பு இல்லை என, தெரியவந்துள்ளது. அந்த கும்பலை வேறு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.