புதுக்கோட்டை:வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதி கண்காணிப்பு குழு விசாரணையை துவக்கியது.
மனித கழிவு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் பட்டியல் இன மக்களின் குடியிருப்பு பகுதி, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், 20 நாட்களுக்கு முன் மனிதகழிவு கலக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் ,வேங்கைவயல் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்ய, நான்கு பேர் கொண்ட சமூக நீதிக் குழு அமைத்து விசாரிக்கப்படும் என, சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, அரசால் அமைக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சாமிநாதன் தேவதாஸ், பேராசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர், நேற்று வேங்கைவயல் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். வெள்ளனுார் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட எஸ்.பி.,யால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவிடம், சம்பவம் குறித்த விசாரணை பற்றி குழுவினர் கேட்டறிந்தனர்.
அறிக்கை
பின், சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் சாமிநாதன் தேவதாஸ் கூறியதாவது:
போலீஸ் விசாரணை முறையாக நடக்கிறது. உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என, கூறி இருக்கிறோம்.
கிராம மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்படும் அமைப்புகள் மற்றும் சமூக வலைத்தள நபர்களை உள்ளே விட வேண்டாம் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. விரைவில் எங்களுடைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்போம்.
அனைவருக்கும் பொதுவான சுடுகாடு, நீர்த்தேக்க தொட்டி இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம்.
இன்னும் ஜாதியை பாகுபாடு இருப்பது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.