புதுடில்லி:ஜாமியா மிலியா இஸ்லாமியா மத்தியப் பல்கலையில் பழங்குடியினர் ஆய்வுத் துறை அமைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை, புதுடில்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் நேற்று சந்தித்தார்.
அப்போது, பழங்குடியினர் ஆய்வுத் துறை, நவீன இந்திய மொழிகள் துறை மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதி ஆகியவற்றை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் அமைக்க வேண்டும் என ஜனாதிபதி முர்முவிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஜாமியா பல்கலையின் கல்வி மையம் நிறுவவும், பல்கலையில் விரைவில் நடக்கவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம், துணைவேந்தர் நஜ்மா வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், பல்கலையில் செவிலியர் கல்லூரி மற்றும் மாற்று மருத்துவத் துறை துவக்கவும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதிக்கக் கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.