திருவொற்றியூர், தெரு நாய்களை பிடிப்பதில், மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி, மண்டலக் குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம், மண்டல தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது.
இதில், மண்டல உதவி கமிஷனர் சங்கரன், குடிநீர் வழங்கல் வாரியம், மின்சாரம் உள்ளிட்ட அதிகாரி கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில், 13வது வார்டு கவுன்சிலர் சுசீலா பேசுகை யில், ''வார்டில், இரு தெரு நாய்கள் சாலையில் விளையாடும் குழந்தைகளை பதம் பார்க்கிறது.
''இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், நோய்வாய்பட்டிருப்பதால், கையாள முடியவில்லை என, 'ப்ளூ கிராஸ்' தொடர்பு எண் வழங்கினர். அவர்களையும் தொடர்பு கொண்டு, நெருங்க முடியவில்லை,'' என்றார்
அதேபோல, 3வது வார்டு கவுன்சிலர் தமிழரசன் பேசுகையில், ''தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களை, கருத்தடை ஆபரேசன் செய்து, மீண்டும் அதே பகுதியில் விடுவது வழக்கமாக உள்ளது.
''ஆனால், மற்ற இடங்களில் பிடித்த தெரு நாய்களை, சிகிச்சைக்கு பின், என் வார்டு பகுதியில் விட்டு செல்கின்றனர். பழக்கமில்லாத இடம் என்பதால், அந்த நாய்கள் உணவிற்கு அல்லல் படுகின்றன. எனவே, எந்த இடத்தில் நாயை பிடிக்கின்றனரோ அந்த இடத்தில் தான் விட வேண்டும்,'' என்றார்.
பின் மண்டல குழு தலை வர் தனியரசு பேசுகையில், ''தெரு நாய்களை பிடிக்கும் பணியில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேலும், தீவிரம் காட்ட வேண்டும்,'' என தெரிவித்தார்.