திருப்பூர்:திருப்பூரில் மல்லிகை பூ விலை நேற்று மேலும் உயர்ந்தது. கிலோ, 3,600 ரூபாய்க்கு விற்றது. இதுவரை இல்லாத விலை உயர்வால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு மொத்தமாகவே நேற்று, 20 கிலோ மல்லிகை பூ மட்டுமே வந்தது. நான்கு வியாபாரிகளிடம் மட்டுமே மல்லிகை பூ இருந்தது. வழக்கமாக நாமக்கல், சேலம், சத்தி, நிலக்கோட்டை பகுதியில் இருந்து திருப்பூருக்கு பூக்கள் வரும்.
நேற்று, சத்தி, நிலக்கோட்டையில் இருந்து மட்டுமே குறைந்தளவு பூ வந்தது. மற்ற பகுதியில் இருந்து வரத்து சுத்தமாக இல்லை. நேற்று முன்தினம், 60 கிலோ பூ வந்த நிலையில், நேற்று, 20 கிலோ பூ மட்டுமே வந்ததால், விலை மேலும் உயர்ந்தது.
இதனால், 250 கிராம், 900 ரூபாய்க்கும், ஒரு கிலோ, 3,600 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது. அரளி, 450, முல்லை, 2,400, செவ்வந்தி,120, காக்கடா, 1,400 ரூபாய்.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'பூ வரத்து இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. திருப்பூரில் இதற்கு முன் இந்த விலைக்கு மல்லிகை பூ விற்றதில்லை. முதன் முறையாக கிலோ, 3,600 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்கப்படுகிறது.
விலை உயர்வால், பூ வாங்க வாடிக்கையாளர் விரும்பவில்லை. சில்லறை வியாபாரிகள் மட்டுமே எங்களிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர்.
பொங்கல் முடிந்து, பனி குறையும் வரை விலை குறைய வாய்ப்பில்லை,' என்றனர்.