சென்னை,:'அப்பாஸ் கல்சுரல்' 31ம் ஆண்டு மெகா கலை விழாவை, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் துவக்கி வைத்தார்.
'அப்பாஸ் கல்சுரல்' நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கலைஞர்களுடன் கைகோர்த்து 2,000க்கும் மேற்பட்ட நாடகம், நாட்டியம், கர்நாடக சங்கீதம் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளது.
அந்த வரிசையில், இந்தாண்டு தி.நகர், வாணி மஹாலில் 31ம் ஆண்டு மெகா கலை விழா நேற்று துவங்கியது. வரும் 22ம் தேதி வரை நடக்கும் விழாவை, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதற்கு முன்னதாக, கிரிதரன் குழுவினரின் 'ஸ்ரீநிவாச அவதாரம்' நிகழ்ச்சி நடந்தது. இதை, 'ஷர்தாஞ்சலி' நாட்டிய பள்ளி மாணவியர், தத்ரூபமாக நடித்து, பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர்.
கலைவிழாவிற்கான டிக்கெட்டுகள், bookmyshow.com மற்றும் abbascultural.com என்ற இணைய தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். விழா நடைபெறும் அரங்கிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
விழாவில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ''கலைஞர்கள் உருவாகலாம், அவர்களுக்கு வாய்ப்பு என்பது அவர்களின் திறமையை ஊக்குவிப்பதில் உள்ளது. இதற்கு 'அப்பாஸ் கல்சுரல்' கார்த்திக் முன்னுதாரணமாக உள்ளார்.
'அப்பாஸ் கார்த்திக், கலைவிழா நடத்துவதில் வருமுடி பற்றி கவலை பட மாட்டார்' என, ஒய்.ஜி.மகேந்திரன் பேசினார். ஆம், அவர் வருமுடி பற்றி கவலை படமாட்டார். அனைவரையும் வரும்படி செய்வார்,'' என்றார்.
நிகழ்ச்சியில், அப்பாஸ் கல்சுரல் கார்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் தேபேந்திர நாராயணன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், 'துக்ளக்' ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் பின், மேடையேறிய ஷீலா உண்ணிகிருஷ்ணனின் 'சிவமயம்' நாட்டிய நாடகம் பெரும் வரவேற்பை வென்றது.
அதைத்தொடர்ந்து நடந்த ஷீலா உண்ணிகிருஷ்ணனின் 'சிவமயம்' நாட்டிய நாடகமும் பெரும் வரவேற்பை பெற்றது. கலை விழாவுக்கு, ஸ்ரீராம் பிராபர்டீஸ், அப்பல்லோ மருத்துவமனை, தினமலர், விகடன், டி.வி.எஸ்., மோட்டார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவளித்துள்ளன.