புதுடில்லி:மஹாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு புறப்பட தயாராக இருந்த 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால், புதுடில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு, மஹாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமான நிலைய அதிகாரிக்கு போனில் பேசிய நபர், புனே விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் விமானம் முழுதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஒரு மணி நேர சோதனைக்கு பின், புரளி என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த விமானம் புனே நகருக்கு புறப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.