சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி சரக்கு விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், மது கடைகளில் முழு அளவு மதுபான வகை இருப்பு வைக்கப்படுவதுடன், 'டாஸ்மாக்' கிடங்குகளில் இருந்து உடனுக்குடன் சப்ளை செய்யப்படுகிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,341 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகையை விற்பனை செய்கிறது.
தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், 'குடி'மகன்கள் நண்பர்களுடன் சேர்ந்து, மது விருந்தில் ஈடுபடுவர். எனவே, அந்த நாட்களில் மது விற்பனை வழக்கத்தை விட மிகவும் அதிகம் இருக்கும்.
அதன்படி, நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, 16ம் தேதி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றும், நாளையும் மது விற்பனை களைகட்டும்.
இதற்காக, மது கடைகளில் முழு அளவுக்கு மதுபான வகை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கிடங்குகளில் இருந்து விற்பனைக்கு ஏற்ப உடனுக்குடன் மது வகை சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.