திருவனந்தபுரம்-கேரள பள்ளிகளில், 'சார்' அல்லது 'மேடம்' என அழைப்பதற்கு பதிலாக, மாணவர்கள் இனி டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என, கே.எஸ்.சி.பி.சி.ஆர்., எனப்படும் கேரள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 'ஆசிரியர்களை அவர்களதுபாலினத்தின்படி, சார், மேடம் என்று அழைப்பது பாகுபாட்டை காட்டுகிறது.
'எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, ஆசிரியர், ஆசிரியைகளை டீச்சர்என்றே மாணவர்கள் அழைக்க உத்தரவிட வேண்டும்' என, தனிநபர் ஒருவர், கே.எஸ்.சி.பி.சி.ஆர்., இடம் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை, கமிஷன் தலைவர் மனோஜ் குமார் மற்றும் உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்து, ஜன., ௧௧ல் பொது கல்வித் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஆசிரியர்களை, சார், மேடம் என்ற மரியாதைக்குரிய வார்த்தைகளால் அழைப்பதை காட்டிலும், டீச்சர் என்று அழைப்பது பாலின நடுநிலையாக உள்ளது.
மேலும், டீச்சர் என அழைப்பதால், ஆசிரியர், மாணவர் இடையே சமத்துவத்தைப் பேண உதவுவதோடு, அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
எனவே, சார், மேடம் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு, இனி டீச்சர் என்றே மாணவர்கள் அழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.