சென்னை:பள்ளிக் கல்வி துறையின் மாதாந்திர ஆலோசனை கூட்டம், முதன்முறையாக மாமல்லபுரம் ஹோட்டலில் நடக்கிறது.
பள்ளிக் கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளனர்; இவர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம், வழக்கமாக சென்னையில் நடத்தப்படும்.
ஆனால், ஜனவரி மாத ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடக்கும் என, பள்ளிக் கல்வி கமிஷனரகம் அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில், வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கூட்டம் நடக்கிறது.
வரும் 30ம் தேதி, அரசு தேர்வுத் துறை சார்பில், பொது தேர்வு ஆயத்த பணிகளுக்கான கூட்டம், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நடக்கிறது. இதில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.