மும்பை,-மஹாராஷ்டிராவில், தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ், நேற்று லாரி மீது பயங்கரமாக மோதியதில், ௧௦ பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; ௨௦ பேர் பலத்த காயமடைந்தனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தின் அம்பர்நாத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் ௪௫ பேர், நேற்று சொகுசு பஸ்சில் ஷீரடிக்கு சென்றனர். இது, வழியில் ஒரு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த ஏழு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண் என, ௧௦ பேர் பலியாகினர்; ௨௦ பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ௨ லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ௫௦ ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ௫ லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.