''தமிழக கவர்னர் ரவியிடம், 15 மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அதில், 12 மசோதாக்கள் ஒரே தன்மை கொண்டவை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2021ல் 25 மசோதாக்களை, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அவை அனைத்துக்கும், கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டார்.
கடந்த 2022 டிச., 22 வரை 59 மசோதாக்களை அனுப்பியதில், 44 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்து விட்டார்.
மொத்தமாக 15 மசோதாக்களுக்கு மட்டும் தான் ஒப்புதல் அளிக்கவில்லை. அவை, அரசியல் சட்டத்துக்கும், மக்களுக்கும் விரோதமானவை என்பதால், அது தொடர்பாக கவர்னர் விளக்கம் கேட்டுள்ளார். உரிய விளக்கம் அளித்தால், ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பார்.
ஆனால், அவர்களால் முறையான விளக்கம் கொடுக்க முடியாது. அதனால், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற வாய்ப்பில்லை.
12 மசோதாக்கள்
நிலுவையில் உள்ள 15 மசோதாக்களில், 12 மசோதாக்கள், ஒரே விஷயத்துக்காக இயற்றப்பட்டவை. அரசு பல்கலைகளின் வேந்தராக, தற்போது கவர்னர் உள்ளார். அதை மாற்றி, முதல்வரை வேந்தராக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை அனுப்பி உள்ளனர்.
அதாவது, 12 பல்கலைகளுக்கு தனித்தனியாக 12 மசோதாக்களை அனுப்பியுள்ளனர்.
இந்த மசோதா, அரசி யல் சட்டத்தின் அடிப்படை விஷயங்களை மீறியது. 1956ல் கொண்டு வரப்பட்ட பல்கலை சட்டத் துக்கு விரோதமானது.
இதே போன்று கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ., ஆட்சி அல்லாத மாநிலங்களிலும் வேந்தரை மாற்றும் மசோதாக்கள், கவர்னரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன.
கவர்னர் ஒப்புதல் அளித்தால், அந்த சட்டத்துக்கு எதிராக யாராவது கோர்ட்டுக்கு செல்வர்; கோர்ட் ரத்து செய்யும். எனவே, கவர்னர் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்?
கூட்டுறவு சங்கங்கள்
அடுத்து, கூட்டுறவு சங்கங்களை கலைக்கும் மசோதா. அதாவது, தற்போது கூட்டுறவு சங்கங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இயக்குனர், தலைவராக இருப்பவர்களை பதவி இழக்கச் செய்யும் மசோதா.
கூட்டுறவு சங்க நிர்வாக பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தவறு இழைத்தனர் என்று கூறி, அவர்களை பதவி இழக்க செய்யும் சட்டத்துக்கான மசோதா தான் அது.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், கூட்டுறவு சங்க இயக்குனர் மற்றும் தலைவரை தேர்வு செய்ய, 40 ஆயிரம் பதவிகளுக்கு, தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பதவிக்கு வந்து விட்டனர். அவர்களை அப்புறப்படுத்தி, அந்த இடங்களில் தி.மு.க.,வினரை கொண்டு வர வேண்டும் என்பதற்கான மசோதா. அதையும் கூட முறையாக செய்யவில்லை என்றே கவர்னர் கூறுகிறார்.
ஜனநாயக மாண்புக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
தனியார் கல்லுாரிகள்
மூன்றாவதாக, தனியார் கல்லுாரிகளை அரசு கல்லுாரிகளாக்கும் சட்ட திருத்த மசோதா. ஒரு தனியார் கல்லுாரி மீது புகார் வந்தால், அந்த கல்லுாரியை அரசுடமையாக்கி விடலாம் என்பது தான் மசோதாவின் சாராம்சம்.
அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர், முறைப்படி அரசு அனுமதி பெற்று கல்லுாரி நடத்தி வருவதாக வைத்து கொள்வோம். அந்த கல்லுாரி மீது ஏதோ ஒரு புகாரை தட்டி விட்டு, அதை வைத்து அரசுடமையாக்கி விடலாம்.
இது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; அடிப்படை உரிமைகளை மீறும் செயல். எனவே, அதற்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை.
'ஆன்லைன் ரம்மி'
நான்காவது மசோதா 'ஆன்லைன் ரம்மி' தடை சட்டத்துக்கான மசோதா. இப்படியொரு மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வந்து, மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கான அதி காரம் மத்திய அரசுக்குதான் உள்ளது.
அது நன்கு தெரிந்தும், மாநில அரசு ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை கொண்டு வந்ததால் தான், சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்தது.
அதன் பின்பும், தி.மு.க., அரசு புது மசோதா தாக்கல் செய்து, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.
தன் அதிகார வரம்புக்குள் இல்லாத ஒரு விஷயத்தை மாநில அரசு செய்து, அதை சட்டமாக்க முயன்றால், கவர்னர் எப்படி ஒப்புதல் அளிப்பார்?
மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வை ரத்து செய்யும் மசோதாவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி விட்டார். தமிழக அரசு, இனி அணுக வேண்டிய நபர் ஜனாதிபதி தான். அவர் ஒப்புதல் அளிக்க, வாய்ப்பே இல்லை.
காரணம், நீட் தேர்வு ரத்து கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுஉள்ளன.
கடைசியாக, வேலுார் சி.எம்.சி., கல்லுாரி, சிறுபான்மையின அந்தஸ்து இருப்பதால், தங்கள் கல்லுாரிக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அதையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. பின், எந்த அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்?
தமிழகத்தை பொறுத்தவரை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் நிலை இது தான். இது தெரிந்தும், உண்மையை மறைத்து, கவர்னர் மீது பொய் புகார் கூறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --