வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாகிஸ்தான் செல்வதற்காக, 'விசா' கேட்கச் சென்ற பஞ்சாபைச் சேர்ந்த பெண் பேராசிரியைக்கு, புதுடில்லியில் உள்ள பாக்., துாதரக அதிகாரிகள் சிலர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக கட்டுரை எழுதினால், பணம் தருவதாக அவர்கள் கூறினர் என்றும் அந்த பேராசிரியை புகார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் பல்கலையில் பேராசிரியையாக பணியாற்றும் பெண், 2021ல் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்ல விரும்பி, விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இது குறித்த விசாரணைக்காக அந்த பெண், புதுடில்லியில் உள்ள பாக்., துாதரகத்துக்கு சென்றபோது, அங்கிருந்த சில மூத்த அதிகாரிகள், விசா வழங்காமல் இழுத்தடித்து உள்ளனர்.
மேலும், அங்கிருந்த ஒரு அதிகாரி, இந்த பெண்ணிடம், 'திருமணம் செய்யாமல் எப்படி உங்களால் வாழ முடிகிறது' என்பது போன்ற விரும்பத்தகாத கேள்விகளை கேட்டதுடன், சொந்த விபரங்களையும் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்தும், நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டார்.

அங்கிருந்து வெளியேறிய அந்த பெண்ணை, சில நாட்களுக்குப் பின் தொடர்பு கொண்ட துாதரக அதிகாரிகள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கட்டுரை எழுதினால், அதிகமாக பணம் தருவதாகவும் ஆசை காட்டியுள்ளனர். இது குறித்து அந்த பெண், ஏற்கனவே பாக்., வெளியுறவு அமைச்சகத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இது குறித்து மனு அளித்ததுடன், நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.