இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31ல் துவங்கவுள்ளது. இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை ஐந்தாவது முறையாக பிப்ரவரில் 1ல் தாக்கல் செய்கிறார்.
ஜனாதிபதி உரை
இதுபற்றி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தெரிவித்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக, பார்லி.,யின் இரு சபைகளும் 31ல் கூடுகின்றன. அன்றைய தினம் துவங்கும் இந்த கூட்டத்தொடர், ஏப்ரல் 6 வரையில் நடைபெறவுள்ளது.
இடைவேளையுடன் 66 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தொடரில், 27 அமர்வுகளில் அலுவல்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்ட கூட்டத்தொடர், பிப்ரவரி 13 வரை நடைபெறும்.
இந்த அலுவல் நாட்களில், ஜனாதிபதி உரை, அந்த உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் மீதான விவாதம் போன்றவை நடைபெறும்.
பின், இடைவேளை எடுத்துக் கொள்ளப்பட்டு, மார்ச் 13ல் மீண்டும் துவங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரையில், இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் நடைபெறும்.
இந்த நாட்களின்போது, மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் பொது பட்ஜெட் நிறைவேற்றம், நிதி மசோதா நிறைவேற்றம் ஆகியவை இடம்பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்ட கூட்டத்தொடர், பழைய கட்டடத்திலேயே நடத்தப்படும். பணிகள் நிறைவடைந்து விட்டால், இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி உரை நிகழ்த்தும் கூட்டுக் கூட்டத்தை புதிய கட்டடத்தில் நடத்திவிட்டு, முதல்கட்ட கூட்டத்தொடரின் அலுவல்களை பழைய கட்டடத்தில் நடத்தவும், இரண்டாம் கட்டத் கூட்டத் தொடரை புதிய கட்டடத்தில் நடத்தலாம் என்ற திட்டமும் உள்ளது.
ஐந்தாவது முழு பட்ஜெட்
வரும் 2024ல் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அப்போது இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும்.
எனவே, பிப்ரவரி 1ல் தாக்கலாகப்போகும் பட்ஜெட் தான், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த ஆட்சியின், இறுதியான முழு பட்ஜெட். அதுவும், நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும், ஐந்தாவது முழு பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது
- நமது டில்லி நிருபர் - .