சென்னை:''தமிழகத்தில் சினிமாவுக்கும், அரசியலுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது,'' என, பா.ஜ மகளிரணி தேசிய செயலர் வானதி சீனிவாசன் கூறினார்.
'ஜி - 20' உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை, இந்தியா ஏற்றுள்ளது. ஜி - 20 அறிமுக விழா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் நடந்தது.
பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலர் வானதி சீனிவாசன் தலைமையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பெண்கள், 'ஜி - 20 லோகோ' வடிவில் அமர்ந்தனர்.
பின், வானதி அளித்த பேட்டி:
ஜி - 20 நாடுகளுடைய தலைமை பொறுப்பை முதன்முறையாக இந்தியா ஏற்கிறது. 2022 டிச., 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரை, ஜி - 20 என கூறக்கூடிய, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை உடைய நாடுகள், இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.
இந்தியா, உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கும் இந்த தருணத்தை, இந்தியாவின் பெருமைகளை சொல்லக் கூடிய வகையில், பா.ஜ., மகளிரணி செயல்படும்.
முக்கிய நகரங்களில், ஜி - 20 நிகழ்ச்சிகளை நடத்த, மத்திய அரசு வாய்ப்பு கொடுத்துள்ளது. 50 நகரங்களில், 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடக்கின்றன.
பொருளாதார பிரச்னை, அதற்கான தீர்வுகள், சுற்றுலா இடங்கள், கலாசாரம், பாரம்பரியம், ஜனநாயகம், ஒற்றுமை குறித்து, உலக நாடுகளுக்கு தெரிவிக்க, இந்த மாநாடு உறுதியாக உதவும்.
தமிழகத்தின் பழமையான கோவில்கள் மற்றும் கலாசார பண்பாடுகளை எடுத்துரைக்க, இதை சரியான வாய்ப்பாக, தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழக பெருமை, தமிழ் மொழி ெபருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, இது சரியான வாய்ப்பாக இருக்கும்.
தமிழகத்தில் சினிமா கலாசாரம் 50 ஆண்டுகளாக, அரசியலோடு இணைந்து இருக்கிறது. சினிமா மட்டுமே வாழ்க்கை கிடையாது. இங்குள்ள இளைஞர்கள், திறன் சார்ந்த பயிற்சிகளை பெற்று முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.