அவிநாசி:'லஞ்சம், ஊழலுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர்' என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அவிநாசி தாலுகா ஆபீசிலுள்ள 'சர்வே' பிரிவில், தலைமை சர்வேயராக பணிபுரியும் மோகன்பாபு, என்பவர், வேலுசாமி என்பவரின் நிலத்தை அளந்து கொடுக்க, 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, விவசாய அமைப்பை சேர்ந்தவர்கள், சில நாட்களுக்கு முன் தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி, தாசில்தார்,ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கினர்.
இருப்பினும், அதிகாரிகளின் நடவடிக்கையில் திருப்தியில்லாததால், நேற்று, விவசாய அமைப்பினர் மற்றும் விவசாயிகள் சிலர், அவிநாசி தாலுகா அலுவலகம் முன் கூடி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகேசன் பேசியதாவது:
ஊழல் குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தும், தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தலைமை சர்வேயர் மீது கூறப்பட்ட லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டாமலேயே, அவருக்கு '17பி' எனப்படும் குறிப்பாணை வழங்கியுள்ளனர்.
அவரை காப்பாற்றும் விதத்தில் தான், அதிகாரிகள் செயல்படுகின்றன். அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் இடைத்தரகர்களாக, கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் மாறியுள்ளனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், குருசாமி, நவீன் பிரபு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், 50 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.