பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார் ஊராட்சியில், விவசாயம் உட்பட, சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.
திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள இப்பகுதி, பள்ளி - கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
ரோட்டோரத்தில் முட்புதர்கள் நிறைந்த காட்டு பகுதியில், சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. இப்படியாக செல்லும் லாரி, வேன் டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலர், சமூக விரோத செயல்களுக்கு துணை போகின்றனர்.
மொத்தத்தில், இரவு நேரங்களில் சிவப்பு விளக்கு பகுதியாக இது மாறி வருகிறது. சின்னக்கரை பஸ் ஸ்டாப் அருகில்தான், போலீஸ் 'செக்போஸ்ட்' அமைந்துள்ளது. ஆனால், வாகனங்களை கண்காணிப்பது மட்டுமே தங்கள் பணி என்ற எண்ணத்துடன், இரவு நேரங்களில் நடக்கும் இது போன்ற செயல்களை கண்டு கொள்வதில்லை.
எப்போதாவது வரும் ரோந்து போலீசாரின் கண்களிலும் இது போன்ற செயல்கள் கண்ணில் படாதது கவலை அளிக்கிறது. சின்னக்கரை மீது போலீசார் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.