கூடுவாஞ்சேரி:முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்த டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில், அவரது தம்பி கவுசி கைது செய்யப்பட்டார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., மஸ்தான், கடந்த டிச., 21ல், உறவினர் இம்ரான் பாஷா என்பவருடன், செங்கல்பட்டு நோக்கி காரில் சென்றார். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது.
தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மஸ்தானின் மகன் டாக்டர் ஹரிஷ் ஷாநவாஸ், 34, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தாம்பரம் காவல் கமிஷனர் அமல்ராஜ், கூடுவாஞ்சேரி உதவி காவல் கமிஷனர் ஜெயராஜ், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது.
மஸ்தானின் உறவினரான இம்ரான் பாஷாவின் மொபைல் போன் எண் அழைப்புகளை, போலீசார் சோதித்தபோது, அவரும், மஸ்தானின் தம்பி கவுசி ஆதாம் பாஷாவும், 57, அடிக்கடி பேசியது தெரிந்தது.
இதையடுத்து, இம்ரான்பாஷாவிடம் விசாரித்தபோது, மஸ்தானை கொலை செய்ததும், அவருக்கு உடந்தையாக மஸ்தானின் தம்பி கவுசி ஆதாம் பாஷா செயல்பட்டதும் தெரிந்தது. ஏற்கனவே, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று, கவுசி ஆதாம் பாஷாவையும் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறியதாவது:
மஸ்தானிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை, இம்ரான் பாஷா கடனாக பெற்றார். திருப்பி தராமல் இருந்ததால், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.
அதேசமயத்தில், மஸ்தானுக்கும், அவரது தம்பி கவுசி ஆதாம் பாஷாவுக்கும் நில தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது. கவுசி ஆதாம் பாஷாவின் மருமகன் தான், கைது செய்யப்பட்ட இம்ரான் பாஷா.
இதனால், இருவரும் சேர்ந்து, மஸ்தானை கொலை செய்ய திட்டமிட்டு, சம்பவ நாளன்று காரில் அழைத்து சென்றனர். பின், இரு கைகளையும் ஒருவர் பிடித்து கொள்ள, மற்றவர் மஸ்தானின் மூக்கு, வாயை துணியால் அடைத்து கொன்றுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.