சென்னை:''ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் மக்கள் தொகையை நிர்ணயம் செய்வதற்கு மூத்த அதிகாரிகளை கொண்ட கமிட்டி அமைக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
தி.மு.க.,- - முத்துராஜா: புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக, அருகில் உள்ள கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: நகராட்சிகளில் மூன்று லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை இருந்தால், அதை மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம். புதுக்கோட்டை நகராட்சியில் 1.68 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்தால், மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு சரியாக இருக்கும். உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது, புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ஜ.,- - வானதி சீனிவாசன்: கோவை மாநகராட்சியில் மசா லே - அவுட் பகுதியில், 300 குடும்பங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பால் அங்குள்ள கால்வாயை துார்வார முடியவில்லை. இந்த கால்வாயை துார்வாரி, அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
அமைச்சர்: கால்வாய் ஓரத்தில் மக்கள் வசிப்பதால், அதனை துார்வார முடியவில்லை. மாற்று இடம் வழங்கினால்தான் பணிகளை துவங்க முடியும்.
தி.மு.க., - -ராஜேந்திரன்: திருவள்ளூர் நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். புதிய கட்டடம் கட்டி தர வேண்டும்.
அமைச்சர்: புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு அலுவலகம் கட்ட, இரண்டு கோடி ரூபாய், மாநகராட்சிக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப, திருவள்ளூர் நகராட்சிக்கு கட்டடம் கட்ட முயற்சி செய்யப்படும்.
தி.மு.க., - -ராஜா: தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டடம் கட்ட, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு 48 கோடி ரூபாயாக உள்ளது. போதிய ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. மண்டல அலுவலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
அமைச்சர்: மண்டல அலுவலகங்கள் கட்ட, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். விரைவில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
காங்., - -செல்வப்பெருந்தகை: ஸ்ரீபெரும்புதுார், மாங்காடு, குன்றத்துார் உள்ளாட்சிகளில் மாநகராட்சிக்கு இணையாக மக்கள்தொகை உள்ளது. எனவே, இவற்றை இணைத்து, மாநகராட்சியை உருவாக்க வேண்டும்.
அமைச்சர்: ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளை, மற்றொரு உள்ளாட்சிகளுடன் இணைப்பது, தற்போதுள்ளவர்கள் பதவிக் காலம் முடியும்போதுதான் செயல்படுத்த முடியும்.
ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் மக்கள் தொகையை நிர்ணயம் செய்வதற்கு, மூத்த அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.