காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தனியார் பள்ளி அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், இரவு நேரத்தில், கல்லுாரி மாணவர் கண்முன், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 20 வயது மாணவர், ஏனாத்துார் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லுாரியில், 20 வயது மாணவியும், வேறொரு பாடப்பிரிவில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.
ஆள்நடமாட்டம் இருக்காது
இருவரும் காதலித்து வருகின்றனர். இருவரும், அடிக்கடி காஞ்சிபுரம் அருகே, குண்டுகுளம் என்ற பகுதியில், பெங்களூரு - புதுச்சேரி செல்லும் புறவழிச்சாலையில், தனியார் பள்ளி அருகே சந்தித்து வந்தனர்.
இவர்கள் சந்திப்பு நடத்தும் பகுதியில், ஆள்நடமாட்டம் இருக்காது. வீட்டுமனைகள் போடப்பட்டுள்ள இடம் அது.
பெரும்பாலும் இவர்கள் அந்த இடத்திற்கு, மாலை மற்றும் இரவு நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று வெகுநேரம் பேசுவதும், நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.
இதை அப்பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் கண்காணித்துள்ளனர்.
காதலர்கள் சந்திப்பு நடத்திய பகுதி இருட்டாக இருக்கும் என்பதால், மர்ம நபர்கள் மது குடிப்பதும், விலை மாதுக்களை அழைத்து வந்து உல்லாசம் அனுபவிப்பதும் வாடிக்கை.
இவர்களின் பார்வை, இளம் காதலர்களின் நடவடிக்கை மீது திரும்பியது.
மிரட்டல்
வழக்கம் போல, அந்த இடத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், மாணவனும் மாணவியும் சந்தித்து, மெய்மறந்த நிலையில் இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூவர், இளம் காதலர்களை சூழ்ந்தனர். 'நீ மட்டும் ஜாலியாக இருந்தால் போதுமா, நாங்களும் இருக்க வேண்டாமா?' என, மாணவனை மிரட்டினர்.
சத்தம் போட்டால் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.
இருவரும் காலில் விழுந்து கெஞ்சினர்; மர்ம நபர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை; மாணவனை தாக்கினர். மாணவரை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து 'தரதர'வென மரத்தின் அருகே இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மொபைல் போன் வாயிலாக, 'விமல், சீக்கிரம் வாடா; சின்ன பொண்ணு ஒண்ணு மாட்டி இருக்கு' என அழைத்தனர். சற்று நேரத்தில் மேலும் இருவர் வந்தனர்.
மொத்தம் ஐந்து பேர், முகத்தில் 'மாஸ்க்' அணிந்த நிலையில், மாணவியை பலாத்காரம் செய்து தப்பினர்.
துருப்பு சீட்டு
இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
சம்பவ இடத்தில், மர்ம நபர்கள், விமல் என்ற பெயரை குறிப்பிட்டதையே துருப்பு சீட்டாக பயன்படுத்தி, விப்பேடு பகுதியைச் சேர்ந்த விமல், 25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இவர் அளித்த தகவலின்படி, விப்பேடு மற்றும் செவலிமேடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 20, மணிகண்டன், 22, விக்னேஷ், 25, தென்னரசு, 25, உட்பட, ஐந்து பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில், 2019 ஏப்ரலில், 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஆட்டோ ஓட்டுனர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பின், 2021 செப்டம்பரில், இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, கீழ்கதிர்பூர் கிராமத்திற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், தனியாகச் சென்ற இளம்பெண்ணை போலீஸ் எனக் கூறி, வடமங்கலம் செல்லும் சாலையில், இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நான்காவது சம்பவமாக, காஞ்சிபுரம் குண்டுகுளம் பகுதியில் நேற்று முன்தினம் கல்லுாரி மாணவியை, ஐந்து பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.