சென்னை:'தமிழக அரசு பணியில் சேர, அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழித் தாளில், 40 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்' என்ற சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில், 2016ம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தின் 21ம் பிரிவின்படி, மாநிலத்தின் அலுவல் மொழியான தமிழில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இல்லையெனில், அவர் நேரடி ஆட்சேர்ப்பு வழியே, பணி நியமனம் செய்ய தகுதி உடையவர் ஆக மாட்டார்.
100 சதவீதம்
தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெற்றால், அவர்கள் பணி அமர்த்தப்பட்ட தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுக்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இல்லையெனில், பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
அனைத்து அரசுத் துறைகளிலும், மாநில பொதுத் துறை நிறுவனங்களிலும், தமிழ் இளைஞர்கள், 100 சதவீதம் சேர்க்கப்படுவதற்காக, நேரடி ஆள் சேர்ப்புக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும், கட்டாய தமிழ் மொழித் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான அரசாணை 2021 டிச., 1ல் வெளியிடப்பட்டது.
இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்காக, 2016ம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்தது.
அதன்படி சட்ட திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன், பா.ம.க., - ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி - முகமது ஷா நாஸ் ஆகியோர் பேசினர்.
சட்ட திருத்தம்
அதற்கு பதிலளித்து, நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றாவிட்டால், தமிழ் தேர்வே தேவை இல்லை என்ற சூழல் வந்து விடும். அதை தடுக்க, இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இது இறுதி சட்ட திருத்தம் அல்ல. சட்டத்தை எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.