பல்லடம்:திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், வீரபாண்டி பிரிவில் உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உருவாகி, 10 ஆண்டுக்கு மேல் ஆகியும், தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு இன்னமும் இடம் ஒதுக்கப்படவில்லை. புதிய இடத்தில் அலுவலகம் அமைக்க பல்வேறு பகுதிகளில் இடம் தேடப்பட்டு வந்தது. இருந்தும், இன்னமும் இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.
தற்போதுள்ள இடத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால், நொச்சிபாளையம் அருகே உள்ள தனியார் நிலத்தில் வாகன ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நடந்து வருகின்றன. இங்கு, அதிகப்படியான வாகனங்கள் ஆய்வுக்கு வருவதால், இப்பற்றாக்குறை ஏற்பட்டு, வாகனங்கள் ரோட்டுக்கு வரும் அவலம் ஏற்படுகிறது.
அவ்வாறு, நேற்று காலை ஏராளமான வாகனங்கள் ஆய்வுக்கு அணிவகுத்தன.
ஆய்வு நடக்கும் தனியார் இடத்திலும் இடம் இன்றி, வாகனங்கள் ரோட்டுக்கு வந்தன. நொச்சிபாளையம் ரோட்டில் ஒரு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு விரைவாக இடம் தேர்வு செய்து, ஆய்வு பணியை அரசு இடத்தில் நடந்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.