கோவை:'கோவை மாவட்டத்தில் தொழிலாளர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாரியம் சார்பில், கோவை கலெக்டர் சமீரனிடம் கொடுத்த மனு:
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உடல் உழைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், தொழிலாளர்களை விரைவில் சென்றடைய, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் அக்குழு அமைக்காமல் இருப்பதால், தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்களுக்கு வாரியத்தால் வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியம் பெரும் உதவியாக இருந்து வந்தது. அவர்களுக்கு மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நிலுவை ஓய்வூதியத்தை வழங்கவும், தாமதமின்றி மாதந்தோறும் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.