பொள்ளாச்சி;'ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டமாட்டேன்; குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன்,' என சாலை பாதுகாப்பு வார விழாவில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், துாய்மை வார விழா, 2023ன் கீழ், சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது. அதில், ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி, மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே துவங்கியது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் பிரியங்கா, கூடுதல் எஸ்.பி., பிருந்தா ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றோர், 'தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டேன், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட மாட்டேன்.
குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன். 'சீட் பெல்ட்' அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன் என உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, கூடுதல் எஸ்.பி., மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஓட்டுனர்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்று, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக ெஹல்மெட் அணிவதன் அவசியம், சாலைபாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து, சோர்வடைந்த நிலையில் உள்ள சரக்கு வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து சாலை பாதுகாப்பு குறித்து கற்பித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சோதனை சாவடிகளில் இரவு நேரங்களில் தணிக்கை செய்து, வாகனத்தின் பின்புறம் சிவப்பு விளக்கு மற்றும் சிவப்பு பிரதிபலிப்பு பட்டைகள் ஒட்டும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனங்களை இயக்குவதை தடுத்தல், அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க சிறப்பு சோதனைகள், சாலையில் பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மலைப்பாங்கான பகுதிகளில் சாலை பாதுகாப்புக்காக தடுப்புகள் மற்றும் தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல், வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும், 17ம் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.