பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வரையாட்டை துன்புறுத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், அடையாளம் தெரியாத சிலர், வரையாட்டின் கொம்பை பிடித்து துன்புறுத்துவது போல் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா ஆகியோர் அறிவுரையின் படி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வரையாட்டை துன்புறுத்திய இருவரை கைது செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரையாட்டை துன்புறுத்தியவர்கள் குறித்து விசாரணை செய்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த, 5ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ஆறாவது கொண்டை ஊசி வளைவில் இந்த வனக்குற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கேரள மாநில பதிவெண் கொண்ட வாகனத்தையும், வாகன உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி கண்டறியப்பட்டது.
வனஉயிரின குற்ற வழக்கு கடந்த, 11ம் தேதி பதிவு செய்யப்பட்டது. குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க நீதிமன்றத்தின் வாயிலாக, பிடிவாரன்ட் பெறப்பட்டது.
கேரள மாநிலம் கோட்டயம் மேவள்ளுரை சேர்ந்த செல்டன்,49, ஜோபி ஆபிராகம்,40 ஆகியோரை தனிப்படை போலீசார், கடந்த, 12ம் தேதி பிடித்து விசாரித்தனர்.
அதில், இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, வரையாட்டை துன்புறுத்தியதற்காக இருவரையும் கைது செய்தனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.