பாட்னா,-பீஹார் மாநிலத்தில் உரிய அனுமதியின்றி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிக்கு வராத டாக்டர்கள் 64 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அராரியா, அவுரங்கபாத், பாங்கா, பாகல்பூர், போஜ்பூர், தார்பங்கா மாவட்டங்களில், அரசு டாக்டர்கள் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருப்பதாக புகார் வந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிக்கு வராத அரசு டாக்டர்கள் 64 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
உரிய அனுமதியின்றி ஐந்து ஆண்டுகளாக பணிக்கு வராதது குறித்து, டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால், பணி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.