ஊட்டி:' மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்,' என, தோட்டக்கலை அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரியில் தேயிலை, மலை காய்கறிகள் பிரதான தொழிலாக உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்காக சிறப்பு கவனம் செலுத்தி விவசாய பயிர்களுக்கு காப்பீடு, மானியம் திட்டங்களை அறிவித்து வழங்கி வருகிறது.
நீலகிரி விவசாயிகளின் நலன் கருதி புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி 'பசல் பீமா யோஜனா' திட்டத்தில், காப்பீடு நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கி வருகிறது.
மாவட்டத்தில் மலை காய்கறிகள் உற்பத்தி அதிகளவில் மேற்கொள்வதால் கடந்த சில ஆண்டுகளாக மழை, பனிப்பொழிவு, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில், 'வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள்,' என, அனைவரும் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை மூலம், காப்பீடு செய்து, பிரீமியம் தொகை வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''இத்திட்டத்தில், பயிர்கள் புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்கும், விதப்பை தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாய ஏற்பாடுகளுக்கு காப்பீடு வழங்கப்படும். இதனை பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டும்,'' என்றார்.