திருநெல்வேலி:''கவர்னர் ரவியை சீண்டாதீர்கள்; தி.மு.க.,வின் வண்டவாளங்கள் வெளிவரும்,'' என, திருநெல்வேலியில், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறியதாவது:
சேது சமுத்திர திட்டத்தை, முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டபடி கட்ட, பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் ராமர் பாலம் சேதமாகும். கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்.
ராமர் பாலம் சேதமாகாமல், அத்திட்டத்தை செயல்படுத்த ஆதரவளிப்போம்.
இத்திட்டத்தின்படி தி.மு.க., - எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரின் கப்பல் நிறுவனங்கள் பயன் பெற போகின்றன. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் பித்தலாட்டமானது.
ஆர்.கே.பச்சோரி கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், இத்திட்டத்தின் மூலம் 12 சதவீதம் லாபம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சுற்றுச்சூழல் அறிக்கைகளும், இந்த திட்டத்திற்கு எதிராகவே கூறியுள்ளன.
மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், பார்லிமென்டில் தெரிவித்த கருத்தை முழுமையாக கூறாமல், முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கடந்த, 2021ல் பிரதமர் மோடி ஒரு குழுவை அறிவித்துள்ளார். அந்த குழு ராமர் பாலத்தின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறது. அந்த குழுவின் அறிக்கை, 2024ல் தான் தெரியவரும்.
'ஆன்லைன்' விளையாட்டுக்கு தடை வேண்டும் என்பதே, பா.ஜ., நிலைப்பாடு. 'ஆன்லைன் ரம்மி' விஷயத்தில், தி.மு.க., அரசு நாடகம் ஆடுகிறது.
தமிழக அரசு, தவறான மசோதா தயாரித்துள்ளது.
ஆன்லைன் திட்டத்திற்கு தடை விதித்தால், ரம்மி நடத்துபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வர். 'நாங்கள் முயற்சித்தோம். கோர்ட் தடை விதித்துவிட்டது' என, பொய் கூற பார்க்கின்றனர்; இது தான் தி.மு.க.,வின் திட்டம்.
கவர்னர், மாண்பு கருதி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் உள்ளார். கவர்னரை சீண்டிக்கொண்டே இருந்தால், அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க நேரிடும். தி.மு.க., அரசின் வண்டவாளங்கள் தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார்.