சபரிமலை:''சபரிமலையில் மண்டல ,மகரவிளக்கு கால வருமானம் ரூ. 310 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,''என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அதிகமான பக்தர்கள் வருவர் என்ற கணக்கின்படி சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சமைப்போரிடம் போலீசார் எடுத்துக்கூற வேண்டும். அன்னதான மண்டபத்தில் அனைவருக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
இங்கு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனி கியூ ஏற்படுத்தப்படும். அரவணையை பொறுத்தவரை அனைவருக்கும் கிடைக்க தேவசம்போர்டு முயற்சிக்கிறது. கூட்டம் அதிகமானால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் மூலம் மண்டல காலத்தில் 231.55 கோடி ரூபாயும், மகரவிளக்கு காலத்தில் ஜன.12 வரை 78.85 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது கேரளாவை சேர்ந்த ஸ்ரீகுமாரன் தம்பிக்கு நாளை நடக்கும் விழாவில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்குவார், என்றார்.