திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் கடற்படையினர் மற்றும் மரைன் போலீசார் 2 நாட்களாக போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாட்டின் மீது மற்ற நாடுகள் போர் தொடுக்கும் நிலைமை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக கடல் பகுதியில் என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த ஒத்திகை நடந்தது. இந்திய கடற்படையினர், கப்பல் படையினர் மற்றும் தேவிபட்டினம்,
தொண்டி மரைன் போலீசார் இணைந்து இரு நாட்களாக தொண்டி, தேவிபட்டினம் கடல் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். கடலில் படகுகளை அப்புறப்படுத்துவது, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது, சைரன்கள் மூலம் எச்சரிக்கை செய்வது போன்ற ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.
கடற்படை அதிகாரிகள் கூறியதாவது: எதிரிகளின் தாக்குதலை சமாளிப்பது மட்டுமின்றி அதை தடுக்கும் ஒத்திகையும் நடந்தது.
வெளி நாட்டு கப்பல்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினால் உடனடியாக தெரிவிப்பது, கடற்கரையோர பகுதிகளில் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இரு நாட்களாக ஒத்திகை நடந்தது. மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றனர்.