மூணாறு:சபரிமலையில் மகரஜோதியை முன்னிட்டு புல்மேடு, பருந்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் ஆய்வு செய்தார்.
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. அதனை சபரிமலையில் மட்டும் இன்றி இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகாவில் உள்ள புல்மேடு, பருந்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
அதனால் அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் நேற்று ஆய்வு நடத்தினார். சப் கலெக்டர் அருண் எஸ்.நாயர், பீர்மேடு தாசில்தார் சுனில்குமார், உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கலெக்டர் கூறியதாவது:
புல்மேடு, பருந்துபாறை, பாஞ்சாலிமேடு பகுதிகளில் அனைத்து துறை சார்பிலான ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. மருத்துவ வசதி, தீயணைப்பு துறை உட்பட ஆம்புலன்ஸ் சேவை, மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
பக்தர்கள் விதிமுறை பின்பற்றி தடுப்புகளை தாண்டாமல் மகரஜோதியை தரிசிக்க வேண்டும். அதன்பின் புல்மேட்டில் இருந்து திரும்ப வேண்டும். அங்கிருந்து சபரிமலை செல்ல அனுமதி இல்லை.
உடல் நிலை பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிதல் உட்பட முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 16 பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் சிறப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. குடிநீர் வாரியம் சார்பில் 14 இடங்களில் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
குமுளி டெப்போவில் இருந்து வல்லக்கடவு, கோழிக்கானம் வழித்தடத்தில் 65 கேரள அரசு பஸ்கள் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணிவரை இயக்கப்படுகின்றன.
சத்திரம், வல்லக்கடவு 4ம் மைல் நுழைவு பகுதி வழியாக காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர், என்றார்.
நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 16 பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.