மாமல்லபுரம்:கயானா துணை அதிபர், மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசித்தார்.
தென் அமெரிக்க கயானா நாட்டின் துணை அதிபர் மோசஸ் வீராசாமி நாகமூத்து, 75, நேற்று முன்தினம், சென்னை, அயலக தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வேலுார் மாவட்டம், ஆற்காடு அருகாமை பகுதியைச் சேர்ந்த தமிழர் அவர். சில தலைமுறை மூதாதையர், கயானா நாட்டில் குடியேறி, அங்கு பிறந்தார். எழுத்தாளராகவும் விளங்கும் அவர், அந்நாட்டில் ஏற்கனவே பிரதமராக பதவி வகித்துள்ளார். தற்போது துணை அதிபராக உள்ளார்.
நேற்று மோசஸ் வீராசாமி நாகமூத்து, மாமல்லபுரம் சுற்றுலா வந்தார். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள், வெண்ணெய் உருண்டை பாறை என, கண்டு ரசித்தார்.
பல்லவர் கால சரித்திரம், இந்திய புராணம் சார்ந்த சிற்பங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி பாலன் விளக்கியதை கேட்டு வியந்தார்.
பின் கயானா துணை அதிபர் கூறியதாவது:
பூர்வீக தமிழக பாரம்பரியத்தை அறிய, இங்கு வந்தேன். கயானா நாட்டின் துணை அதிபராக உள்ளேன். மாமல்லபுரம் சிற்பங்கள், என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கலையாக மட்டுமே இல்லாமல், ஆன்மிகத்தை உணர்த்தும் கடவுள் சிலைகள் வியப்பளிக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.