சென்னை:''தனியார் மருத்துவமனைகளின் தரத்தை வைத்து அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுகிறது'' என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
பா.ம.க.- - சதாசிவம்: அரசு காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன. அறுவை சிகிச்சை செய்வதற்கு 3.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால் காப்பீடு திட்டத்தில் 1.40 லட்சம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் 11 ஆண்டுகள் கழிந்தும் இதே தொகை தான் வழங்கப்படுகிறது. சில மருத்துவமனைகள் அரசு காப்பீட்டு அட்டையை ஏற்றுக் கொள்வது கிடையாது.
அமைச்சர் சுப்பிரமணியன்: காப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. முன் 1455 சிகிச்சைகள் மட்டுமே காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கப்பட்டன. தற்போது 1513 சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் 970ல் இருந்து 1775 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதயம் கல்லீரல் கணையம் உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 22 லட்சம் ரூபாய் காப்பீடு கட்டணமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 7500 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். தனியார் மருத்துவமனைகளின் தரத்தை வைத்து அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.