சென்னை:''சட்டசபையில் ஜன.9ம் தேதி நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
கடந்த 9ம் தேதி கவர்னர் இந்த சபையில் 2023 - 24ம் ஆண்டு துவக்க உரையாற்றினார். அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும் அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை பாராட்டியும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் சுருக்கமாக அறிவித்து உரையாற்றினார்.
அன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை.
அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் நுாற்றாண்டை கடந்த சட்டசபையின் விழுமியங்களை போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன். இதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
தமிழ் காக்க தமிழர் நலன் காக்க தமிழகத்தின் மானம் காக்க என்றும் உழைக்கும் கருணாநிதி மகன் என்பதை மெய்ப்பித்து காட்டும் நாளாக அன்றைய தினம் அமைந்திருந்ததே தவிர வேறல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.