வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டி.ஆர்.பாலு: தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு:
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு கொடுத்து அனுப்பினார்; அமைச்சரின் தலைமையின் கீழ், நாங்கள் உடன் சென்றோம். ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது சீலிடப்பட்ட கவர். எனவே, கடிதத்தில் என்ன விபரங்கள் இருந்தன என்பது குறித்து, எங்களுக்கு தெரியாது.

டவுட் தனபாலு: 'சீல்' வச்ச கவருக்குள்ள என்ன இருக்குதுன்னு தெரியாமலே, தமிழகத்துல இருந்து பிளைட் பிடிச்சு அஞ்சு பேர் டில்லிக்கு போயிருக்கீங்களே... கட்சியில ரொம்பவும் சீனியரான உங்களை, 'கூரியர் பாய்' ஆக்கிட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா:
ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்த சேகர்பாபு, கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் கேவலமாக சட்டசபையில் பேசிவிட்டு, தற்போது, தி.மு.க.,வில் அமைச்சராக இருக்கிறார். 'கவர்னருக்கு எதிராக அவரை ஏவி விட்டால் என்னாகும்' என்று கேட்கிறார், ஆர்.எஸ்.பாரதி. ஏற்கனவே, முதல்வர் பதவிக்கு உலை வைக்க முடிவு செய்து விட்டீர்கள்; இப்போது, சேகர்பாபுவின் அரசியல் வாழ்க்கையையும் முடிக்க நினைத்து விட்டீர்கள்.

டவுட் தனபாலு: சேகர்பாபு பாவம்... சிவனே என கோவில், கோவிலாக சென்று வழிபாடு நடத்திட்டு, அவரது வேலையை செஞ்சிட்டு இருக்காரு... அவரது துறையில ஆர்.எஸ்.பாரதி ஏதாவது சிபாரிசுக்கு போய், மறுக்கப்பட்டதால, அவரை கோர்த்து விட பார்க்கிறாரோ என்ற, 'டவுட்' தான் எழுது!
மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ., நாகை மாலி:
'ராமர் பாலம்' எனக்கூறி, ராமர் பெயரை சொல்லி, சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டு விட்டது. கட்டுக் கதைகளையும், கற்பனைகளையும், நம்பிக்கைகளையும், சிலர் வரலாறு என்கின்றனர். இவை வரலாறு ஆகாது. ராமாயணம் சிறந்த இலக்கிய படைப்பு. ஆனால், அது ஒரு கற்பனை காவியம். இதை, காந்தியடிகளே சொல்லி உள்ளார்.
டவுட் தனபாலு: ராமாயணம் கற்பனை காவியம் என்றால், அதே காந்தியடிகள், 'ராம ராஜ்யம்' அமைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாரே... அதை, 'டவுட்' இல்லாம ஏத்துக்கிறீங்களா?