சென்னை:''தமிழகத்தில் நில ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டப் பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை,'' என, முதன்மை கணக்காயர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அரசு மற்றும் தனி நபர்களின் நில உடமையை சரிவர ஆவணப்படுத்துவது, அரசின் முக்கிய பணி. பட்டா, சிட்டா, புலப்படம், அடங்கல் போன்றவை நிலம் தொடர்புடைய ஆவணங்கள்.இவற்றை முழுதும் கணினிமயமாக்கும் திட்டம், மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.2020 - 21 வரை கணினிமயமாக்கப்பட்ட நில ஆவணங்களின் உண்மை தன்மை பராமரிப்பு நில ஆவணங்கள் தொடர்பான செயலாக்க தணிக்கை அறிக்கை சட்டசபையில் ஒப்படைக்கப்பட்டது.
அரசு நிலங்களை தனியார் வாங்கி இருந்தாலும் அவர்களின் பெயருக்கு மாற்றப்படாமல் அரசின் பெயரில் இருப்பதால் அவர்களால் கடன் வாங்க விற்க முடியவில்லை. தனியாரிடம் அரசு நிலம் வாங்கினால் அதை உடனே அரசு பெயருக்கு மாற்ற வேண்டும்.நிலத்தில் என்னென்ன பயிரிடப்பட்டது என்ற விபரம் தெரிய வேண்டும். இதற்காக விவசாயிகளும், அதிகாரிகளும் பயிர் விபரங்களை 'இ - அடங்கலில்' பதிவு செய்கின்றனர். அவற்றை கிராம நிர்வாக அதிகாரி 100 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும்.
இருப்பினும், விவசாயிகளின் பதிவுகளை வி.ஏ.ஓ.,க்கள் சரிபார்ப்பதில்லை.
இணையதள பட்டா பரிமாற்ற மனுக்களின் மீதான நடவடிக்கையை ஆய்வு செய்ததில் 66 சதவீத விண்ணப்பங்கள் தவறாக அனுமதிக்கப்பட்டிருந்தன. மேலும் 86 சதவீத விண்ணப்பங்கள் தவறாக நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் நில ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்ட பணிகள் முறையாக செயல்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.