திண்டிவனம், : கீழ் கூடலுார் ஊராட்சியில் விதி மீறி கட்டப்பட்ட தடுப்பணையால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் பேசிய ஆடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்கூடலுார், ஈச்சேரியைச் சேர்ந்தவர் சேகர். கீழ்கூடலுார் ஊராட்சி தலைவர்.
இவர், கீழ்கூடலுார் ஊராட்சியில் விதி மீறி தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவிட்டுள்ளார்.
அதன் விபரம்:
'பண செல்வாக்கை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் ஒருவர், தடுப்பணையைக் கட்டுவதற்கான பணி ஆணையை அதிகாரிகள் துணையுடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த தடுப்பணை சுடுகாட்டுப் பாதை அருகே உள்ள ஓடையில் கட்ட வேண்டிய தடுப்பணை என பதிவேட்டில் உள்ளது.
ஆனால், தடுப்பணையை ஏரி அருகே உள்ள வரப்பு ஓடையில் கட்டி மக்களின் வரிப்பணமான, 4 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை வீணடித்துள்ளனர்.
பி.டி.ஓ., அலுவலகத்தில் பணி ஆணையை வாங்கி பார்த்தபோது, தடுப்பணை கட்ட அறிவித்த இடம் ஒன்றாகவும், ஒப்பந்ததாரர் கட்டிய இடம் வேறு இடமாகவும் உள்ளது.
இது எப்படி சாத்தியமாகும். இதை இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதை நான் ஏன் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன் என்றால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தாலும், அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர்.
தடுப்பணை அங்கு கட்ட யார் அனுமதி வழங்கியது. பொறியாளர் அனுமதி வழங்கினாரா அல்லது ஒப்பந்ததாரரே அங்கு சென்று தடுப்பணை கட்டினாரா என மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த தடுப்பணைக்கு பில் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்' என பேசி பதிவிட்டுள்ளார்.
இந்த ஆடியோ, சமூக வலை தளங்களில் பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.