கடலுார்: கடலுார் நகரின் மையப்பகுதியில் விஸ்தாரமான அமைந்துள்ள மஞ்சக்குப்பம் மைதானம் பராமரிப்பு இன்றியும்,குப்பைகள் கொட்டியும் வீணடிக்கப்பட்டுள்ளது.
கடலுார் நகர மையப்பகுதியில் விஸ்தாரமான பரப்பளவில் அமைந்துள்ளது மஞ்சை நகர் மைதானம். மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள இந்த மைதானத்தில் அரசியல் கட்சிகளின் மாநாடு, தனியார் கண்காட்சிகள், பொருட்காட்சிகள், சர்க்கஸ் உள்ளிட்டவை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த மைதானம் ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கியும், நகராட்சி குப்பை கொட்டும் இடமாக மாறியும், சுகாதாரச் சீர்கேட்டை சந்தித்து வருகிறது.
கடலுார் மாநகரில் வரபிரசாதமாக அமைந்துள்ள இந்த மைதானம் பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும், விஸ்தாரமான மைதானம் சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு பரப்பளவும் சுருங்கியுள்ளது.
ஒரு பகுதியில், மாநகராட்சி சார்பில், பாபு கலையரங்கம் கட்டப்பட்டு நகராட்சி குப்பை வண்டிகள் நிறுத்தப்படுகிறது. பழைய கலெக்டர் அலுவலக கடைகள், வாகன நிறுத்தங்கள் என, ஆக்கிரமித்துள்ளன. மேலும், மைதானத்தில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் என, பாழ்படுத்தப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடத்த மேடைகள் அமைக்கப்பட்டு, அவைகளும் பராமரிப்பின்றி பாழ்படுத்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் குளமாக தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
நகரின் பிரதான பகுதி என்ற நிலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் வழி என்ற நிலையிலும், மைதானத்தில் நகராட்சி சார்பில், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மாலை நேரத்தில் வயதானவர்கள், அலுவலக ஊழியர்கள், இளைஞர்கள் என பலரும் இங்கு வந்து காற்று வாங்கிச் செல்வது வழக்கம். அதற்கேற்ப அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது, செடி கொடிகள், புற்கள் முளைத்து காடுபோன்று மாறியுள்ளது. இறந்து போன நாய்கள் மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம், மற்றும் சுகாதார சீர்கேட்டுடன் துர்நாற்றம் வீசுவதால், மைதானத்திற்கு இரவு நேரங்களில் ஓய்வெடுக்க யாரும் வருவதில்லை. இதனால், மாலை 7:00 மணி ஆகிவிட்டால் மைதானம் திறந்தவெளி பாராக' மாறி விடுகிறது. குடிப்பிரியர்கள் மதுபாட்டில்கள், தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்களுடன் மைதானத்திற்குள் வந்து காற்று வாங்கியபடி உட்கார்ந்து இயற்கைச் சூழலில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
அவர்கள் உபயோகித்த பாட்டில்கள், கேரி பேக்குகள், காலியான தண்ணீர் பாலிதீன் பாக்கெட்டுகள் வீசி விட்டு செல்கின்றனர். அத்துடன், அங்குள்ள ஹைமாஸ் விளக்கும் சரியாக எரியாததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கும் பஞ்சமில்லை.
எனவே, நகரின் மையப்பகுதியில் வேறெங்கும் இல்லாத அளவில் கடலுாருக்கு வரபிரசாதமாக அமைந்துள்ள மைதானத்தை, ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்கவும், சுகாதார சீர்கேடு இல்லாமல் முறையாக பராமரித்து, மைதானத்தை சுற்றிலும் தடுப்புகள் அல்லது மதிற்சுவர் அமைத்து பாதுகாக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.