புதுச்சேரி : மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை புதுச்சேரி மாநிலத்திலேயே ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியை கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் நேற்று சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி மேலாண் இயக்குனர் கருணாகரன், கல்லுாரி நிர்வாகி சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லாரி முதல்வர் செந்தில் வினோத் வரவேற்றார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் நமச்சிவாயம், பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
ஆசிரியர் பணிக்கு செல்ல இருக்கின்றீர்கள். ஆசிரியர் பணி குறித்த அறிவு ,சிந்தனை இவைகள் குறித்து நீங்கள் தெளிவாக இருந்தால்தான் நாம் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை போதிக்கமுடியும்.
சிறந்த கல்வியின் மூலம் தான் மாணவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்டுகிறது. மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மேலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை புதுச்சேரி மாநிலத்திலேயே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். இதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
கல்வியியல் கல்லுாரியை கல்வித்துறையுடன் இணைக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.