மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுார் வனக்காட்டில் வனவிலங்குகள் குடிநீர்பருகுவதற்காக உருவாக்கப்பட்ட குளங்கள் துார்ந்து பாழாகி வருகிறது. அதனைசீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் காடுகளைச் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் மான்கள், காட்டுப்பன்றிகள், முயல், மயில், நரி போன்ற விலங்குகள் அதிக அளவில் வசிக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் இந்த வனப் பகுதியில் வனவிலகுகளின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்ய ஆங்காங்கே குளங்கள் வெட்டப்பட்டது.
இதன் மூலம், மழைக் காலங்களில் குளங்களில் நீர் நிரம்பி, வனவிலங்குகள் குடிநீர் பருகி வந்தன. தற்போது காடுகள் அழிந்து வந்த நிலையில் வனத்துறையினர் இப்பகுதியில் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக காடுகளில் அமைக்கப்பட்டுள்ள குளங்களை பராமரிக்காமல் விட்டு விட்டனர்.
இதனால், குளங்கள் துாரந்து தண்ணீர் நீரம்ப வழியின்றி போனது. இதனால், மான்கள், குரங்குகள் உள்ளிட்டவைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்குள் வருகிறது. அப்போது, விவசாய கிணற்றில் விழுவதும், நாய்களால் கடிபட்டு இறப்பதும் நீடித்து வருகிறது.
காடுகளில் உள்ள குளங்களை சீரமைத்து வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க நடவடிக்கை எடுத்தால் வனவிலங்குகள் உயிர் இழப்பைத் தடுக்கலாம்.
மேலும், காடுகளில் வனவிலங்குகளை காக்க பழ மரங்களை வளர்க்க வேண்டும் என அரசு அறிவித்தது. ஆனால், வனத்துறையினர் இப்பகுதியில் பழ மரங்களை நடாமல் யூகலிப்டஸ் மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர்.
யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் இப்பகுதியில் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள காடுகளில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பழ மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன், வனப் பகுதி விலங்குகளுக்காக வனத்தில் உள்ள குளங்களை துார் வாரி சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.