புதுச்சேரி : விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் ஜி 20 மாநாட்டையொட்டி நடந்த மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் சுவாமி விவேகானந்தர் சேவை மையம் இணைந்து விவேகானந்தர் பிறந்தநாள் விழா, ஜி 20 மாநாட்டை யொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதற்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாரி தலைமை தாங்கினார். பாஸ்கரன் வரவேற்றார். சேவை மையம் தலைவர் வெற்றிசெல்வம், ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலம் ஜோதி செந்தில்கண்ணன், ஓமியோபதி டாக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெண் கல்வி இணை இயக்குநர் சிவராமரெட்டி பரிசு வழங்கி, பாராட்டினார்.
விழாவில் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் அதிகாரி ரவி, பேராசிரியர் அனந்தநடராஜன், மைய நிர்வாகிகள் செல்வம், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரவிந்தராஜா நன்றி கூறினார்.