புதுச்சேரி : காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் இலவச அரிசி, துணி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்;
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமலே, நாட்டில் முதல் முறையாக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி உள்ளார்.
அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை அமல்படுத்திய முதல்வருக்கும், ஒப்புதல் அளித்த கவர்னருக்கும் நன்றி.
இலவச அரிசி, வேட்டி, புடவைக்கு பதிலாக பணம் வழங்குவதை மக்கள் விரும்புவதாக கவர்னர் கூறுவது தவறு. பெரும்பாலன மக்கள் நேரடி பணத்திற்கு பதில் அரிசி உணவு பொருட்களை விரும்புகின்றனர்.
நேரடி பண பரிமாற்றம் என்பது, மக்களுக்கு எதிரான திட்டம். கடந்த காங்., தி.மு.க, ஆட்சியில் இலவச அரிசி, துணி, பண்டிகை கால பொருட்கள் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு, ஊழல் நடந்தது.
அப்போது ஊழல் செய்தவர்கள் மீதும், துணை போன அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்காது.
பொதுமக்களுக்கு வழங்க வாங்கப்பட்ட பொருட்களில் முறைகேடு, கமிஷன் பெற்றதால் நல்ல திட்டத்தை மாற்றம் செய்வது தவறு.
பழைய முறைப்படி பணத்திற்கு பதில் இலவச அரிசி, உணவு பொருட்கள், துணிகள் எவ்வித முறைகேடுகளின்றி வழங்க வேண்டும்.