ஆந்திரா திருடன் கைது
மதுரை: ஒத்தக்கடை, உசிலம்பட்டி பகுதியில் ஏ.டி.எம்., மையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் திருடப்பட்டது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், ஆந்திரா மாநிலம் நகரியைசேர்ந்த கிேஷாரை கைது செய்து ரூ.10.85 லட்சத்தை மீட்டனர். இவரது, கூட்டாளிகள் சதீஷ், சந்திரா, ராஜூவை தேடி வருகின்றனர்.
லாரி -- வேன் மோதி ஒருவர் பலி
திருமங்கலம்: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஆரோக்கியம் 40. கரும்பு லோடுகள் ஏற்றுவதற்காக நேற்று சங்கரன்கோவிலில் இருந்து மதுரைக்கு டாரஸ் லாரியை ஓட்டி சென்றார். கப்பலுார் மேம்பாலத்தில் மாட்டுத்தாவணிக்கு செல்ல லாரியை திருப்பியபோது மதுரை பரவை மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளுடன் தனக்கன்குளம் வேல்பாண்டி ஓட்டி வந்த வேன் மோதியது. இதில் கரும்பு லாரியில் வந்த கிளீனர் சங்கரன்கோவில் கோமதிபுரம் கண்ணன் 50, பலியானார். ஆரோக்கியம், வேல்பாண்டி காயமுற்றனர்.
மின்சாரம் தாக்கி ஒருவர் காயம்
உசிலம்பட்டி: நகராட்சி மருத்துவமனை அருகில் பயணிகள் நிழல் குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் கட்டடத்திற்கு மேல் உயர் அழுத்த மின் வயர் செல்கிறது. நேற்று மதியம் 12:30 மணிக்கு கட்டட பணியின்போது கருக்கட்டான்பட்டி டிரைவர் அலெக்ஸ் 46, ஓடுகளை டிராக்டரில் எடுத்து வந்தார். கட்டடத்தின் மேலே ஏறிச்சென்றவர் தவறுதலாக மின் வயரை பிடித்தபோது மின்சாரம் தாக்கி காயமுற்றார்.
மூவர் கைது
மேலுார்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பா.ஜ., ஒன்றிய செயலாளர் மணிகண்டன் 32. நேற்று புதுசுக்காம்பட்டியில் கரும்பு வாங்க வந்த போது மேலுார் சொக்கம்பட்டி சங்கர் 47, தமிழ்செல்வம் 35, முத்துவேல்பட்டி கணேசன் 34, ஆகியோர் தகராறு செய்து ஒன்றரை பவுன் செயின், ரூ.3 ஆயிரம், அலைபேசியை பறித்தனர். மூவரையும் எஸ்.ஐ., அந்தோணி இமானுவேல் கைது செய்தார்.
வழிப்பறி: மூவர் கைது
சோழவந்தான்: மேலக்கால் - - விக்கிரமங்கலம் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே வாகனங்களில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்த மேலக்கால் செல்வத்தை 48, காடுபட்டி போலீசார் கைது செய்தனர். இதேபோல் நாகமலை புதுக்கோட்டை பைபாஸில் வழிப்பறி செய்த மேலக்குயில்குடி கவிராஜா 28, நாகமலை புதுக்கோட்டை காளிமுத்துவை 26, போலீசார் கைது செய்தனர்.